நல்லம்பள்ளி, ஆக 02 | ஆடி 17 -
சென்னை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த “நலம் காக்கும் ஸ்டாலின்” முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் காணொளி காட்சி மூலம் ஒளிப்பரப்பப்பட்டது. நிகழ்வில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசாணை எண் 157 (03.06.2025) அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை மொத்தம் 30 உயர் மருத்துவ முகாம்கள் நடைபெறும். ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஒரு முகாம் நடைபெறும். முகாமில் பொது மருத்துவம், எலும்பு முறிவு, இதயநலம், நரம்பியல், நுரையீரல், நீரிழிவு, தோல், பல், கண், காது-மூக்கு-தொண்டை, மனநலம், இயற்கை மருத்துவம், உணவியல் ஆலோசனை உள்ளிட்ட 17 சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. பரிசோதனைக்கு வரும் அனைவருக்கும் ஆபா கார்டு வழங்கப்பட்டு, முதலமைச்சர் விரிவான காப்பீட்டு அட்டைக்கு பதிவு செய்யப்படுகிறது.
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குறைபாடு கொண்ட குழந்தைகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகள், இதய நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான சிறப்பு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. தேவையெனில் நோயாளிகள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி அறுவை சிகிச்சை அளிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட சுகாதார அலுவலர் பூபேஷ், இணை இயக்குநர் (மருத்துவம் & ஊரக நலப்பணிகள்) சாந்தி, தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 5 பயனாளிகளுக்கு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார்.