Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு – கொலையா? போலீசார் விசாரணை.


தருமபுரி - மார்ச் 12:


தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாரண்டஅள்ளி அருகே உள்ள அமானி மல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி திருப்பதி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களின் இரண்டாவது மகன் ரஞ்சித் (28). இன்னும் திருமணம் ஆகாத இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.


கடந்த 6ஆம் தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்ற ரஞ்சித் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆஃப் நிலையில் இருந்ததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், ரஞ்சித்தை கண்டுபிடித்து தருமாறு மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அமானி மல்லாபுரம் பகுதியில் தேவகி என்பவரின் விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.


தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலக்கோடு தீயணைப்பு துறை வீரர்கள், கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த வாலிபரின் உடலை மீட்டனர். விசாரணையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் ரஞ்சித் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரஞ்சித்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


ரஞ்சித் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies