தருமபுரி – ஆகஸ்ட் 30 (ஆவணி 14)
தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு அணியின் மாநில செயலாளராக திரு. முருகன் யோவன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் தலைமையில், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே சுய தொழில் தொடங்கி வருமானம் ஈட்டுவதற்கான வழிகளை உருவாக்கி, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நோக்கத்துடன் கலந்தாய்வு கூட்டம் ஒன்று பாப்பிரெட்டிபட்டி பிலஷ்சி காம்ப்ளக்ஸ், வாணியாறு பாலம் அருகில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆலோசகர்களாக திரு. ஜான் மில்டன் பிரபு, திரு. ஜான் சந்திரசேகர் மற்றும் திரு. மணிகண்டன் ஆகியோர் பங்கேற்று, அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறும் வழிகள், சுய தொழில் தொடங்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றம் குறித்து விரிவான உரைகளை நிகழ்த்தினர்.
ஒவ்வொரு மாதமும் இறுதி சனிக்கிழமையன்று இத்தகைய கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெறும் எனவும், மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்து தங்கள் முன்னேற்றத்திற்கு முயற்சி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இக்கலந்தாய்வு கூட்டத்தில் 25 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது.