தருமபுரி, ஆகஸ்ட் 30 (ஆவணி 14):
இந்த முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, 103 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர். முதலமைச்சரின் அறிவிப்பின் படி, 21.04.2025 அன்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவை திட்டம், 03.06.2025 அரசாணையின் அடிப்படையில், கடந்த 02.08.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதன் கீழ், தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் 2025 வரை மொத்தம் 30 மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இன்றைய முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு முழுமையான உடல் பரிசோதனைகளுடன், 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகள், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை (CMCIS), மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் அனைவருக்கும் ஆபா கார்டு (ABHA CARD) வழங்கும் பணிகள் நடைபெற்றன.
கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குறைபாடு கொண்ட குழந்தைகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், படுக்கையிலிருந்து எழ முடியாத நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. கண்புரை நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
மருத்துவ நிபுணர்கள் பரிசோதனை செய்ததுடன், இலவச சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன. மேலதிக சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் “நலம் காக்கும் ஸ்டாலின்” பல்நோக்கு மருத்துவ முகாமில் கலந்து கொள்ள வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு. மனோகரன், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு. சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு. ராஜேந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. சரவணன், அரசுத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.