தருமபுரி மாவட்டத்தில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மிதிவண்டி பேரணி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மற்றும் கேலோ இந்தியா மாவட்ட தடகள மையம் சார்பில் ஹாக்கி நாயகன் மேஜர் தயான்சந்த் பிறந்தநாள் (29.08.2025) தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படும் நிலையில், ஆகஸ்ட் 29 முதல் 31 வரை பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் நாளில் மாணவர்களுடன் உறுதிமொழி எடுக்கப்பட்டது. 30ம் தேதி 50 மீட்டர் தொடரோட்டம், 50 மீட்டர் ஓட்டம், யோகா, கயிறு இழுத்தல் மற்றும் மூத்த குடிமக்களுக்கான 300 மீ நடைப்போட்டி நடத்தப்பட்டது.
இன்று (31.08.2025 – ஆவணி 15) நடைபெற்ற நிறைவு நாளில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மிதிவண்டி பேரணியை தொடங்கி வைத்து, விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் மிதிவண்டி ஓட்டுவதின் அவசியம் குறித்து மாணவர்களிடம் உரையாற்றி, வீரர்–வீராங்கனைகளுடன் மிதிவண்டி ஓட்டினார். மிதிவண்டி பேரணி மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்கி நான்கு ரோடு சந்திப்பு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வழியாகச் சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டரங்கில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி சாந்தி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு. சாந்தி, நகர் நல அலுவலர் திரு. இலட்சிய வர்ணா, பயிற்றுநர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.