காரிமங்கலம், ஆக. 19 | ஆவணி 3 -
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுக்கா பெரியாம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 17 வயது மகள், +2 படிப்பை பாதியிலேயே கைவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அதே பகுதியில் வசித்து வந்த சிவசக்தி (23) என்ற வாலிபர், சிறுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர் இருவருக்குமான நட்பு காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெற்றோரின் கண்டனத்தை அசட்டையாகக் கருதி, கடந்த மார்ச் மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, அப்பகுதியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, உறவினர் இல்லத்தில் தங்கி குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இதில் தற்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி நல அலுவலர் சாந்தி, பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், பாக்சோ சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறுமியை கர்ப்பமாக்கிய சிவசக்தியை தேடி வருகின்றனர்.