ஒகேனக்கல் – ஆக 19 | ஆவணி 3 -
மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு தீர்க்கும் நோக்கில் தமிழக அரசு மாநிலம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மக்களின் குறைகளை பெறும் முகாம், ஒகேனக்கல் பெரியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இம்முகாமில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி ஆகியோர் நேரில் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். இதில் ஏழு நபர்களுக்கு 100 நாள் வேலைத் திட்ட பணியட்டை, இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், ஊரக வளர்ச்சி இயக்குநர் (தணிக்கை) வேடியப்பன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கீதா, சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், லோகநாதன், வட்டாட்சியர் சண்முகசுந்தரம், கூத்தப்பாடி ஊராட்சி செயலாளர் குமரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.