பாப்பிரெட்டிபட்டி, ஆக. 25 | ஆவணி 9 -
பாப்பிரெட்டிபட்டி அருகே 179A அரூர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நிறைவு பெற்று, ஹுப்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு தற்போது சுங்கக் கட்டணம் வசூலித்து வருகிறது என நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த நெடுஞ்சாலையில் மஞ்சவாடி கணவாய் முதல் அரூர் வரை மின் விளக்குகள் நிறுவப்படவில்லை. மேலும் அவசரகாலத்தில் பயன்படுத்த வேண்டிய Emergency Call Point Booth வசதி இல்லாததும், சுங்கச் சாவடியில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவையும் இல்லை என்பதும் பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், சாலை பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட தடுப்பு சுவர்களில் அரசியல் கட்சிகள் கருப்பு-மஞ்சள் நிறங்களை அழித்து சுவர் விளம்பரங்கள் மற்றும் நோட்டீஸ் ஒட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் தடுப்பு சுவர்களின் எதிரொளிப்பு குறைந்து, இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, நெடுஞ்சாலை துறையும் காவல்துறையும் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் மற்றும் நாம் தமிழர் கட்சி முன்னாள் பாதுகாப்பு படைவீரர் பாசறை மாநில துணை செயலாளர் திரு. அருண்குமார் ஜெ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.