பாப்பிரெட்டிபட்டி, ஜூலை 24 | ஆடி 08 -
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே அமைந்துள்ள அரூர் – சேலம் 179A தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்த பிறகும், நிழற்குடை அமைக்கும் பணிகள் நீண்ட நாட்களாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்நிலையில், அந்தப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பாதுகாப்புப் படைவீரர் பாசறை துணை செயலாளருமான திரு. அருண்குமார், குறித்த பகுதியின் புகைப்படங்களை எடுத்து குறைதீர் செய்தியாக தகடூர்குரல் இணையதளம் மற்றும் சில தினசரி பத்திரிகைகளிலும் செய்தி பிரசுரம் செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஊடக செய்திகளின் தாக்கமாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாக்கி இருந்த நிழற்குடை அமைக்கும் பணிகளை விரைந்து முடித்தனர். மேலும், தற்போது 179A சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், மஞ்சவாடி கணவாய் முதல் அயோத்தியாப்பட்டிணம் வரை சுமார் 20 கிலோமீட்டர் பகுதியில் சாலை பெரிதும் சேதமடைந்துள்ளதால், அவற்றை சீரமைக்கவும், புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் மின் விளக்குகள் பொருத்தவும் நெடுஞ்சாலைத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த செய்தியின் மூலம், ஊடகங்கள் மூலம் பொதுமக்கள் குறைகள் உரியதாரர்களை சென்றடைந்து, விரைவான தீர்வுகள் எடுக்கப்படுவதற்கு வழிவகை செய்ய முடிகிறது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.
– செய்தியாளர்: அருண்குமார்.ஜெ