தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில், இரவு நேரங்களில் லாரிகளிலிருந்து டீசல் திருடி கலப்படம் செய்து விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். வாகன ஓட்டிகள் சிலர் உடந்தையாக இருப்பதாகவும், இது வாகனங்களின் என்ஜின் பழுதுகளுக்கு காரணமாக இருப்பதாகவும் வாகன உரிமையாளர்கள் புகார் அளித்திருந்தனர்.
பாலக்கோடு டி.எஸ்.பி. மனோகரன் தலைமையில் நடைபெற்ற சோதனையில், காரிமங்கலத்திற்கு உட்பட்ட பொன்னேரி, கெரகோடஅள்ளி, அன்புநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக பதுக்கப்பட்டிருந்த 415 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குமார், செல்வராஜ், கோபி, சுப்ரமணி, சக்திவேல், பிரவின் குமார், மற்றொரு செல்வராஜ் மற்றும் கலைச்செல்வன் ஆகிய 8 பேரை கைது செய்தனர். மேலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.