பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 16 | ஆனி 32 -
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை முன்பகுதியில் நீண்ட நாட்களாக தேங்கிக்கிடக்கும் குப்பைமேடு தற்போது பொதுமக்களிடையே அவதியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு தினமும் வருவோர், மருத்துவப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் இந்தக் குப்பை மேடுகளை அவ்வப்போது கடந்து செல்கின்றனர், அனைவரும் இத்தனை நாட்கள் இதைப் பார்த்தும் எதுவும் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "இந்த குப்பை மேடு ஹெல்த் இன்ஸ்பெக்டர் கண்களுக்கு தெரியவில்லையா? திறந்தவெளியில் இவ்வாறு குப்பைகள் குவிந்து கிடப்பது சுகாதாரத்துக்கே அபாயமாக இருக்கிறதே?" என்ற கவலையை அவர்கள் வெளியிட்டுள்ளனர். மருத்துவமனை என்பது நோய்கள் குணமாகும் இடம்; ஆனால் இவ்வாறு மருத்துவமனை வாயிலிலேயே சுகாதார சீர்கேடு நிலவுவதால், நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வரும்போது கூட, புதிய தொற்றுகளை எடுத்துச்செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதனை உடனடியாக சீர் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.