பென்னாகரம், ஜூலை 17 | ஆடி 1 –
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15ஆம் தேதி தொடங்கி வைத்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஆதனூரில் இன்று முகாம் நடைபெற்றது. அஞ்சேஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஆதனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு குறைகளை குறித்த மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. மக்கள் நலனை முன்வைத்து, ஒரே இடத்தில் பல்வேறு அரசு துறை சேவைகள் வழங்கும் வகையில் முகாம் நடைபெற்றது.
மகளிர் உரிமை, ஊரக வளர்ச்சி, வருவாய், பேரிடர் மேலாண்மை, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, வேளாண்மை உள்ளிட்ட 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகள் இந்த முகாமில் வழங்கப்பட்டன. முகாமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ் நேரில் பார்வையிட்டு, முகாமின் செயல்திறனை ஆய்வு செய்தார். இதையடுத்து, தருமபுரி மாவட்ட உதவி ஆணையர் (ஆயம்) எஸ். நர்மதா, பென்னாகரம் வட்டார ஊராட்சி அலுவலர் சக்திவேல், கிராம ஊராட்சி அலுவலர் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மக்கள் மனுக்களை பெற்றனர்.