பொம்மிடி, ஜூலை 16 | ஆனி 32 -
ஆய்வின்போது, மையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் சேவைகள் குறித்தும், அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார். குறிப்பாக, மக்களை தேடி மருத்துவம், தாய் மற்றும் சேய் நலத்திட்டங்கள், குடும்ப நல சேவைகள் ஆகியவற்றின் நடைமுறை, பயனாளிகள் எண்ணிக்கை, சேவையின் தரம் போன்றவை குறித்து நேரடியாக தகவல் பெற்றார்.
தமிழ்நாடு அரசு, மக்கள் நல்வாழ்வை உயர்த்தும் நோக்கத்தில், நவீன மருத்துவ வசதிகளை அனைத்து மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில் புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டடவசதி மேம்பாடு, மருத்துவக் கருவிகள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வழிகாட்டுதலின் கீழ் “மக்களை தேடி மருத்துவம்”, “இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48” போன்ற திட்டங்கள் ஊர்மக்களுக்கு நேரடி நன்மைகளை அளிக்கின்றன.
டி.துறிஞ்சிப்பட்டி நல வாழ்வு மையத்தின் மூலம் மகப்பேறு நல சேவைகள், பச்சிளம் மற்றும் வளர்பிறை குழந்தைகளுக்கான சேவைகள், இளம் பருவத்தினருக்கான பராமரிப்பு, குடும்ப கட்டுப்பாடு, தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்களுக்கு எதிரான சிகிச்சைகள் உள்ளிட்ட முதன்மை சுகாதார சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மக்கள், தங்களுக்கே அருகிலுள்ள இந்த மையத்தின் மூலம் அடிப்படை மருத்துவ உதவிகளைப் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. பொன்னரசன் மற்றும் திரு. குமரேசன், உதவிப் பொறியாளர் திரு. சீனிவாசன், மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.