காரிமங்கலம், ஜூலை 17 | ஆடி 01 -
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே ரம்யா தியேட்டர் அருகே நேற்று (16ம் தேதி) இரவு சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குப்பன் (வயது 53), காரிமங்கலத்தில் உள்ள ஒரு ஒட்டலுக்குச் செல்லும் நோக்கில் சாலையில் நடந்துச் சென்றுள்ளார். இரவு சுமார் 8 மணியளவில், ரம்யா தியேட்டர் அருகே வந்தபோது, பின்னால் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவரை மோதியது.
அந்த மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து வந்திருந்த பிரியதர்ஷினி (29) என்பவரும் காயமடைந்தார். இருவரும் அருகிலிருந்த பொதுமக்களால் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விவசாயி குப்பன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பிரியதர்ஷினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக காரிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.