காரிமங்கலம், ஜூலை 29 | ஆடி 13 -
தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பகுதியில் இன்று மாலை, ஊருக்குள் செல்லாமல் புறவழிச்சாலையில் இயக்கப்பட்ட தனியார் பேருந்துகளை கண்டித்து, பொதுமக்கள் சிறிய அளவிலான மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தினசரி தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பெரும் இடையூறுகளுக்கு உள்ளாகி வருவதாகக் கூறி, தனியார் பேருந்துகள் ஊருக்குள் செல்ல வேண்டுமென வலியுறுத்தினர்.
இந்த நிலையில், இன்று மாலை சுமார் 7:30 மணியளவில், ஊருக்குள் செல்லாமல் புறவழிச்சாலையைத் தேர்ந்தெடுத்து இயங்கிய ஏழு தனியார் பேருந்துகள் பொதுமக்களால் வழிமறிக்கப்பட்டன. பின்னர், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விரைந்து வந்து, அனைத்து பேருந்துகளையும் சிறைபிடித்து அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கக் கேட்டுக் கொண்டார். அதன்படி ஏழு பேருந்துகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் காரணமாக சுமார் 2 மணி 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, நிலைமையை மீண்டும் இயல்பாக்கினர்.