பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 09-
தருமபுரி மாவட்டத்தில் உள்ள கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த 15 ஆண்டுகளாக தங்கள் கிராமத்திலிருந்து கூசுமலை அடிவாரம் வரை சாலை வசதி வேண்டி தொடர்ந்து அரசிடம் மனுக்கள் அளித்து வருகின்றனர். மொத்தமாக 1.2 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இதுவரை 1 கி.மீ வரை மட்டுமே ஜல்லிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர், அதே 1 கி.மீ தூரத்தில் தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலை முழுவதும் மழை வெள்ளத்தில் கரைந்துபோய், மிக மோசமான நிலைமைக்குள்ளாகியுள்ளது. மீதமுள்ள 200 மீட்டர் பகுதியில் சாலையே இல்லை. இதனால் அந்த வழியாக பயணிக்க வேண்டும் என்றாலே பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.
இந்த பகுதியில் வசிக்கும் சுமார் 25 குடும்பங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் தோட்டங்களில் விளைந்த தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை வெளியே கொண்டு செல்ல முடியாமல் கால தாமதமும், பொருட்கள் அழுகும் நிலையும் உருவாகி வருகிறது. மேலும், மாட்டுப்பாலும் இழந்து விடும் அளவிற்கு சாலைமுட்டில் சிக்கல் ஏற்படுகின்றது.
மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகள் பள்ளிக்கு செல்ல, கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர் அரசு மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவசர சிகிச்சை தேவைப்படும் நேரங்களில் சாலை மோசமாக இருப்பதால் உயிரிழப்பும் ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.
எனவே, கதிரிபுரம் – கூசுமலை சாலை மட்டுமல்லாமல், பையர்நத்தம் – கதிரிபுரம் வரை உள்ள குண்டும் குழியுமான சாலைகளுக்கு, முறையான தார் சாலை அமைக்க வேண்டும். மேலும், வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவும், இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.