தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு இன்று ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தொழிற்சங்கங்களின் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு மாநில செயற்குழு உறுப்பினர் கலாவதி தலைமை வகித்தார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சிகளை கைவிடுதல், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தல், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தினை தொடர்ந்து, பஸ்ஸ்டாண்ட் பகுதியில் இருந்து தக்காளி மண்டி வரை ஊர்வலமாக செல்ல முயன்ற நிலையில், 175 பெண்கள் மற்றும் 75 ஆண்கள் என மொத்தம் 250 பேரை போலீசார் இந்தியன் வங்கி அருகே கைது செய்து, அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் கொண்டு சென்று தற்காலிகமாக வைத்தனர். பாலக்கோடு போலீசார் இந்த போராட்டம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். பின்னர், அன்றிரவு அனைவரும் விடுவிக்கபட்டனர்.
போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கத்தினரின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். பொதுத்துறை உரிமைகளை காக்கும் நோக்கில் போராட்டங்கள் தொடரும் என கலந்துகொண்ட தலைவர்கள் தெரிவித்தனர்.