பாலக்கோடு, ஜூலை 09 (ஆனி 25):
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மண்டல அளவிலான மகளிருக்கான கபடி போட்டி நடைபெற்று மாணவிகளின் திறமைக்கு மேடையாக அமைந்தது. இந்தப் போட்டியில் பேளாரஅள்ளி, ஜெர்தலாவ், திருமல்வாடி, பெல்ரம்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இதில் தீவிரமான போட்டிகளுக்கிடையே, ஜெர்தலாவ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்து, மாவட்ட மட்டப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை வட்டார கல்வி அலுவலர் ஜெகன், தலைமை ஆசிரியர் விஜயா, உதவி தலைமை ஆசிரியர் தெய்வம், உடற்பயிற்சி ஆசிரியர் மோகனப்பிரியா மற்றும் கபடி பயிற்சியாளர் பிரபு ஆகியோர் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இது போன்ற விளையாட்டு போட்டிகள், மாணவிகளின் உடற்திறன் மேம்பாட்டையும், மன உறுதியையும் வளர்க்கும் வகையில் பயனுள்ளதாக இருப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.