தருமபுரி, ஜூலை 9 (ஆனி 25) -
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்), தருமபுரி மண்டலம் சார்பில் இன்று தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் 7 புதிய மகளிர் விடியல் பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டு, 4 வழித்தடங்களில் மாற்றம் மற்றும் நீட்டிப்புடன் புதிய சேவைகள் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.மணி ஆகியோர் புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடக்கிவைத்தனர்.
மாநில முதலமைச்சரின் தலைமையிலான தமிழக அரசின் நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக கடந்த நான்கு ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்தில் 6 புதிய பேருந்து வழித்தடங்கள் மற்றும் 101 வழித்தட மாற்றங்கள்/நீட்டிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் 127 பேருந்துகள் இயக்கப்பட்டு, 286 கிராமங்கள் மற்றும் நகரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 2,71,963 பேருக்கு பயனளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பழைய புறநகர் பேருந்துகளுக்குப் பதிலாக 31 புதிய பேருந்துகள் மற்றும் 45 புனரமைக்கப்பட்ட பேருந்துகள் என மொத்தம் 76 பேருந்துகள், மகளிர் விடியல் பேருந்துகளுக்குப் பதிலாக 20 புதிய பேருந்துகள் மற்றும் 15 புனரமைப்புப் பேருந்துகள் என 35 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் துவக்கப்பட்ட முக்கிய வழித்தட சேவைகள்:
-
தருமபுரி – சின்னம்பள்ளி (இரவு நடை சேர்ப்பு)
-
தருமபுரி – பாப்பாரப்பட்டி (பிக்கம்பட்டி வழியாக)
-
பென்னாகரம் – தின்னூர் (MKS நகர் மாரியம்மன் கோயில் வரை நீட்டிப்பு)
-
பென்னாகரம் – ஏரியூர் (கொட்டதண்டுகாடு, அஜ்ஜனஅள்ளி வழியாக)
இந்த புதிய சேவைகள் மற்றும் மாற்றப்பட்ட வழித்தடங்களின் மூலம் மேலும் 10 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 11,050 பேர் பயனடைவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன், கீழ்கண்ட வழித்தடங்களில் பயணிக்கும் மகளிர் விடியல் பேருந்துகளுக்குப் பதிலாக 7 புதிய பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டன:
-
பொம்மிடி – தருமபுரி (வழி-கடத்தூர்)
-
பொம்மிடி – தொப்பூர் (வழி-கொப்பக்கரை, முத்தம்பட்டி)
-
பாலக்கோடு – தருமபுரி (வழி-புலிக்கரை, சோமனஅள்ளி)
-
பாலக்கோடு – அத்திமுட்லு (வழி-வெள்ளிச்சந்தை, மாரண்டஅள்ளி)
-
பாலக்கோடு – கிருஷ்ணகிரி (வழி-காவேரிப்பட்டணம்)
-
பென்னாகரம் – பாலக்கோடு (வழி-பி. அக்ரஹாரம், பாப்பாரப்பட்டி)
-
தருமபுரி – பென்னாகரம் (வழி-பி. அக்ரஹாரம், இண்டூர்)
இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி. வெங்கடேஷ்வரன், மண்டல பொது மேலாளர் திரு. க. செல்வம், தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி லட்சுமி நாட்டான் மாது, நகராட்சி ஆணையாளர் திரு. சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.