பாலக்கோடு, ஜூன் 10 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் சோழ மண்டலம் தனியார் நிதி நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் பல்வேறு மோசடி மற்றும் முறைகேடுகளை குற்றச்சாட்டாக முன்வைத்து நேற்று முற்றுகையிட்டனர்.
இந்த நிறுவனம் வாகனக் கடன், காப்பீடு உள்ளிட்ட நிதி சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின்படி, வாகனக் கடன்கள் முழுமையாக அடைத்த பின்பும், பல மாதங்களாக என்.ஓ.சி (No Objection Certificate) சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும், ஒரே நபரின் பெயரில் உள்ள பல வாகனங்களில் ஒருவகை கடன் மட்டும் முடிந்தாலும், மற்ற கடன்கள் அடைக்கப்படாமால் என்.ஓ.சி மறுக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள்.
மேலும் தவனை தொகைகளை தவறாமல் கட்டும் வாடிக்கையாளர்களிடம், சில நாட்கள் காலதாமதம் ஏற்பட்டால் கூட வாகனங்களை பறிமுதல் செய்து, அதிக அபராதத் தொகை வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில், பாலக்கோடு லாரி உரிமையாளர் முருகேசன் என்பவரின் லாரி, தவனை தொகையை 5ம் தேதி கட்ட வேண்டிய நிலையில் 3 நாள் தாமதமானதால், அந்த லாரி ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்தபோது, வாடகைக்குச் சென்றிருந்த இடத்தில் குண்டர்களை அனுப்பி, டிரைவரை தாக்கி, வாகனத்தை மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குடன் பறிமுதல் செய்துவிட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து முருகேசன் மற்றும் பல பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் இணைந்து நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு, லாரியை உடனடியாக விடுவிக்கக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த பாலக்கோடு காவல் துறையினர் உடனடியாக இடத்திற்குச் சென்று இருதரப்பினரையும் சமாதான பேச்சுவார்த்தைக்குக் அழைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.