
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரனின் உத்தரவின்படி காரிமங்கலம் போலீசார், எஸ்.ஐ. சுந்தரமூர்த்தி மற்றும் எஸ்.ஐ. ஆனந்தகுமார் தலைமையில் பேருந்து நிலையம், அகரம் பிரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த காரிமங்கலம் அக்ரஹாரத்தைச் சேர்ந்த சீனிவாசன் (32), அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (45), வேணுகோபால் தெருவைச் சேர்ந்த முரளிதரன் (35) ஆகிய மூவரும் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து போலீசார் ரூ.10,000 ரொக்கம், மூன்று செல்போன்கள் மற்றும் பல தொகுப்புகளாக கேரளா லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
