
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில், ஒகேனக்கலில் மசாஜ் செய்து வரும் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கக்கோரி, மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளை கண்டித்தும் இன்று (20.05.2025) மதியம் 12.30 மணியளவில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
இந்த போராட்டத்தில் 60க்கும் மேற்பட்ட மசாஜ் தொழிலாளர்கள் பங்கேற்றனர். “தொழிலாளர்களின் உரிமையை பறிக்காதே!”, “ஏழை மக்கள் வயிற்றில் அடிக்காதே!” என உரத்த கோசங்கள் எழுந்தன. மசாஜ் தொழிலாளர்களுக்குள் பகைமையை உருவாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், முறையான அனுமதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தை புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார செயலாளர் தோழர் சத்தியநாதன் தலைமையில் நடத்தப்பட்டது. போராட்டம் தொடங்கியவுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், வரும் வியாழக்கிழமை (22.05.2025)க்குள் பேச்சுவார்த்தையை இறுதிப்படுத்தி, எண்ணெய் தேய்க்கும் தொழிலாளர்களுக்கு அனுமதி அட்டைகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தங்களது விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வழங்கினர். தற்காலிகமாக போராட்டம் முடிவடைந்தாலும், தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்ட இந்தக் குரல் தொடர்ந்து எழப்படும் என அமைப்பினர் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக