தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக கிருஷ்ணன் பணியாற்றி வருகிறார். இவர் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியபோது கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் கிருமிநாசினி வாங்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து ஊராட்சி செயலாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்பொழுது கிருமி நாசினி வழங்கப்படாமலே, பணம் வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர், ஆய்வாளர் பழனிசாமி தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவினர், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலணியில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனின் வீட்டில் காலை ஆறு மணி முதல் சோதனை நடத்தினர். தொடர்ந்து இந்த விசாரணை 11.30 மணி வரை, 5 மணி நேரம் சோதனை நடைபெற்றது.
அப்போது இந்த சோதனையின் முடிவில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை, ஆனால் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதே வழக்கில் முன்னாள் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த மலர்விழி வீடு மற்றும் தொடர்புடைய ஒன்பது இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.