தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2025–2026 கல்வியாண்டிற்கான வகுப்புகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. இந்நிலையில், முதலாம் ஆண்டு மாணவ–மாணவிகளை வரவேற்கும் விழா கல்லூரி சார்பில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் கல்லூரி முதல்வர் செல்வராணி தலைமையிலாக, புதிய மாணவர்களுக்கு பூங்கொத்து வழங்கி அவர்களை உற்சாகமாக வரவேற்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா முன்னிலை வகித்தார். மூத்த விரிவுரையாளர் ரவி வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் கே. சரண்யா பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து தனது உரையில், "மாணவர்கள் ஒழுக்கம் மற்றும் நேர்மையை கடைபிடித்து, நவீன தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று, நாட்டுக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்" என்று மாணவர்களுக்கு ஊக்கமளித்தார். இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், தொழில் அதிபர்கள், முன்னாள் மாணவர்கள், மாணவ–மாணவிகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.