தருமபுரி, ஜூலை 6 (ஆனி 22, சுபகிருது) –
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்தில் உள்ள தாளநத்தம் ஊராட்சியின் கீழ் அமைந்துள்ள அய்யம்பட்டி, நொச்சிக்குட்டை, காவேரிபுரம், குண்டல் பட்டி, கோவில் வனம், தாளநத்தம், நடூர் உள்ளிட்ட ஏழு கிராமங்களில் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் உள்ள நடூர் (அருந்ததியர்) கிராமத்தில், 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 10,000 லிட்டர் கொள்ளளவுடைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, அதில் ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் நடைபெறவில்லையென, இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக, அவர்கள் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு சென்று, தங்களது அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுத்து, முறையான குடிநீர் விநியோகம் வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.