மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ மாணவியர்கள் அவர்கள் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே சென்று தன்னார்வலர்களின் பங்கேற்புடன் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பை வழங்கும் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தினை கடந்த 27.10.2021 அன்று துவக்கி வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தருமபுரி மாவட்டத்தில் இல்லம் தேடிக்கல்வி திட்டத்தின் கீழ் 7653 பெண் தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து தங்கள் பகுதிகளில் உள்ள 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் 1,05,748 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக பாடங்களை கற்பித்து வருகின்றனர்.
இத்திட்டத்தினால் பள்ளி மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் சிறப்பாக மேம்பட்டு வருகின்றது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பந்தார அள்ளி ஊராட்சி, கரகப்பட்டி கிராமத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் பந்தார அள்ளி பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி திருமதி.விஜய சாந்தி (BE-EEE) மற்றும் எம்.ஏ தமிழ் முதுநிலை பட்டம் பயின்று வரும் திருமதி.பி.ஐஸ்வர்யா ஆகிய இரண்டு தன்னார்வலர்களும் இணைந்து மாலை நேரங்களில் கரகப்பட்டி கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாடங்களை கற்பித்து வருகின்றனர்.
இந்த இரண்டு தன்னார்வலர்கள் ஒவ்வொருவரிடமும் சுமார் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் மாலை நேரங்களில் ஆர்வமுடன் படித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பந்தார அள்ளி ஊராட்சி, கரகப்பட்டி கிராமத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாடங்கள் கற்பித்து வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் 28.09.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அம்மாணவ, மாணவியர்களிடம் இங்கு எவ்வளவு நாட்களாக பயின்றுகொண்டு இருக்கின்றிர்கள் எனவும், உங்களுக்கு மாலை நேரங்களில் பாடம் நடத்துகின்ற இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் நன்றாக பாடங்களை கற்பிக்கின்றார்களா எனக்கேட்டார்கள்.

அதற்கு அங்கு படித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் தன்னார்வலர்கள் பாடங்களை நன்றாக நடத்துகின்றார்கள் எனவும், நாங்கள் பள்ளியில் படித்து வருகின்ற போதும் இங்கு மாலை நேரங்களில் தன்னார்வலர்கள் சொல்லி கொடுக்கின்ற பாடங்களை கேட்க்கும் போது பாடங்கள் நன்றாக புரிகின்றது, மனதில் நன்கு பதிகின்றது எனவும் தெரிவித்ததோடு, எனவேதான் நாங்கள் பள்ளி முடிந்தவுடன் நாள்தோறும் மாலையில் இங்கு வந்து பாடங்களை ஆர்வமுடன் கற்று கொண்டிருக்கின்றோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரசு பள்ளிகளில் பயின்று வரும் குழந்தைகளுக்கு இல்லம் தேடிக் கல்வித் திட்டம் என்பது மிகுந்த பயனுள்ள சிறப்பான திட்டமாகும். இத்திட்டத்தினால் பள்ளி மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் சிறப்பாக மேம்பட்டு வருகின்றது. தாங்கள் கற்ற கல்வியை நம் பகுதியில் உள்ள ஏழை, எளிய குழந்தைகளும் கற்க வேண்டும் என்ற உயர்ந்த என்னத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் சேவை மனப்பான்மையோடு குழந்தைகளுக்கு சிறப்பாக பாடங்களை கற்பித்து வரும் தன்னார்வலர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் சேவை மனப்பான்மையோடு பணியற்றி வரும் தன்னார்வலர்களாகிய நீங்கள் தொடர்ந்து இக்குழந்தைகளுக்கு சிறப்பாக பாடங்களை கற்பித்திட வேண்டும் என தெரிவித்தார்கள். இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திருமதி.வெ.தீபனாவிஸ்வேஸ்வரி இஆப., அவர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக