தருமபுரி – ஜனவரி 12:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில், 100-க்கும் மேற்பட்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நீர்த்தேக்க தொட்டிகளில் ஆபரேட்டர்களாக பணிபுரியும் ஊழியர்களுக்கு, 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் 01.07.2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு இதுவரை முழுமையாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிக்கமாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, கும்மனூர், கொலசனஅள்ளி, சாமனூர் ஆகிய சில ஊராட்சிகளில் மட்டும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற ஊராட்சிகளில் பணிபுரியும் ஆபரேட்டர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் ஆபரேட்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி தலைமையில், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகாவிடம் மனு அளிக்கப்பட்டது.
மனுவை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகிகள், வரும் மாதம் 10-ம் தேதிக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படாவிட்டால், வேலைநிறுத்தம், அலுவலக முற்றுகை, சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிகழ்வின் போது மாவட்ட செயலாளர் மணி, வட்டார தலைவர் அருள்மணி, நிர்வாகிகள் மனோகரன், ராஜேந்திரன், முனிராஜ், மாணிக்கம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)