பாலக்கோடு, ஜன. 10:
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக சக்திவேல் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தேமுதிகவை சேர்ந்த தருமபுரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜதுரை என்பவர், பத்திர எழுத்தராக இருந்து கடந்த வாரம் பத்திரப் பதிவு செய்வதற்காக பாலக்கோடு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
ராஜதுரை சமர்ப்பித்த ஆவணங்களை சார் பதிவாளர் சக்திவேல் சரிபார்த்தபோது, அதில் இணைக்கப்பட்டிருந்த வாரிசு சான்றிதழ் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை இணையதளத்தில் சரிபார்த்ததில், சமர்ப்பிக்கப்பட்ட வாரிசு சான்றிதழ் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அந்த பத்திரப் பதிவு நிராகரிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜதுரை, சார் பதிவாளரை பத்திரத்தை பதிவு செய்யுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், பத்திரப் பதிவு செய்ய மறுத்ததால், சார் பதிவாளர் சக்திவேல் பணம் கேட்டதாக சமூக வலைதளங்களில் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி, அவதூறு செய்துவருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சார் பதிவாளர் சக்திவேல், தன்னை மிரட்டும் வீடியோ ஆதாரத்துடன் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பாலக்கோடு காவல் துறையினர் ராஜதுரை மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சார் பதிவாளரை மிரட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி ஆவணங்கள் மற்றும் போலி பத்திரப் பதிவுகளை முற்றிலும் தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் தேவை என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

