தருமபுரி – ஜனவரி 13:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நள்ளிரவில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்பள்ளியில் 203 மாணவ–மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக மலர்கொடி பணியாற்றி வருவதுடன், சத்துணவு அமைப்பாளராக ராதா பணியாற்றி வருகிறார். மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்ததும், சமையலறை மற்றும் பள்ளி வளாகத்தை பூட்டி ஊழியர்கள் சென்றுள்ளனர். திங்கட்கிழமை காலை பள்ளிக்கு வந்த சத்துணவு அமைப்பாளர் ராதா, பள்ளியின் மெயின் கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து பாலக்கோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில், பள்ளியின் சமையலறை கதவு உடைக்கப்பட்டு, அங்கிருந்த கோதுமை ரவை, அரிசி, பருப்பு, சேமியா, சமையல் எண்ணெய், சமையல் பாத்திரங்கள், கேஸ் சிலிண்டர், கேஸ் ஸ்டவ், மாணவர்கள் உணவு உண்ண பயன்படுத்திய சில்வர் தட்டுகள் உள்ளிட்ட சுமார் ரூ.50,000 மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
திருட்டு சம்பவம் காரணமாக மாணவர்களின் உணவு வழங்கல் பாதிக்கப்படாத வகையில், உடனடியாக வாடகை கேஸ் சிலிண்டர் மற்றும் ஸ்டவ் ஏற்பாடு செய்யப்பட்டு காலை உணவு சமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் லேப்டாப், கணினி, பிரிண்டர் போன்றவை திருடப்பட்டு வந்த நிலையில், தற்போது சமையல் பொருட்களையும் திருடர்கள் விட்டு வைக்காமல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

.jpg)