தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், நரியன அள்ளி கிராமத்தில் உள்ள தும்பல அள்ளி நீர்த்தேக்கம் முழு கொள்ளவை எட்டியதைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி சாந்தி இஆப அவர்களால் தும்பல அள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று (31.08.2022) உபரிநீர் திறந்து திறந்து விடப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:- தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் பாசன வசதி செய்யும் பொருட்டு பெண்ணையாற்றின் கிளை நதியான பூலாப்பட்டி ஆற்றின் குறுக்கே நரியன அள்ளி கிராமத்தில் தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பெரியாம்பட்டியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் தும்பல அள்ளியில் நீர்த்தேக்க அணையானது அமைந்துள்ளது. இது தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவ மழையினால் நீர்வரத்து பெறுகிறது.
இந்நிலையில் தற்பொழுது நல்ல மழை பெய்துவருவதால் சின்னாறு அணை தற்பொழுது முழு கொள்ளளவை எட்டி அதிலிருந்து உபரி நீர் வெளியேறி வருவம் உபரி நீர் இந்த தும்பல அள்ளி நீர்த்தேக்க அணைக்கு வந்து கொண்டிருக்கின்றது. சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு நீர்வரத்து கிடைக்கப்பெற்று இந்த நீர்த்தேக்க அணையின் 14.76 அடி உயரத்தில் இன்றைய தினம் (31.08.2022) சுமார் 12.14 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. மேலும் இந்நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 256.00 கன அடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு இன்றைய தினம் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் பூலாப்பாடி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ, ஆற்றில் மீன்பிடிப்பதற்வோ செல்ல வேண்டாம் எனவும், பூலாப்பாடி ஆற்றின் கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உடனடியாக மேடான பகுதிகளுக்கு வந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்) செயற்பொறியாளர் திரு.எஸ்.குமார், காரிமங்கலம் வட்டாட்சியர் திரு. சுகுமார், உதவி பொறியாளர்கள் திருமதி. மாலதி, திரு.வெங்கடேசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
