பாலக்கோடு, செப்டம்பர் 24 | புரட்டாசி 07:
காரிமங்கலம் அருகே தும்பலஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த மார்ச் 26ஆம் தேதி அதே ஊரை சேர்ந்த வாலிபருடன் காதல் திருமணம் செய்துகொண்டார். சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்ததை சமூக நலத்துறை அலுவலர் கண்டறிந்து, பாலக்கோடு மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வீரம்மாளுக்கு (50) தகவல் அளித்தார்.
இதன் பின்னர், இன்ஸ்பெக்டர் வீரம்மாள் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை செய்தபோது, சிறுமியை குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும் பட்சத்தில், 50,000 ரூபாய் கொடுக்குமானால் வழக்கை கைவிடுவதாகக் கூறியுள்ளார்.
பணம் கொடுக்க விரும்பாத சிறுமியின் தாய், தர்மபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி நாகராஜிற்கு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், டி.எஸ்.பி நாகராஜன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார், சிறுமியின் தாயிடம் இருந்து ரூ.50,000 வழங்கப்படும் போது இன்ஸ்பெக்டர் வீரம்மாளை கைது செய்து விசாரணை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேர விசாரணையின் பின்னர், லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதால், இன்ஸ்பெக்டர் வீரம்மாளை கைது செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பாலக்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.