தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரி பகுதியில் சாலையோரம் உள்ள மரத்தடியில் நேற்று கார் ஒன்று கேட்பாரற்று நின்று இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பொதுமக்களின் தகவலின் பேரில் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை சோதனை செய்தனர். சோதனையில் காரில் மூட்டை, மூட்டையாக தடைசெய்யப்பட்ட குட்கா இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், ஆய்வாளர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மூட்டைகளை சோதனை செய்தனர்.
அந்த காரில் சுமார் 750 கிலோ அளவுள்ள தடை செய்யப்பட்ட குட்காவை பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. ஆனால் கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது விசாரணையில் தெரியவந்தது, இதையடுத்து போலீசார் குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர், இந்த விசாரணையை போலீசார் விரிவுபடுத்தியுள்ளனர்.
