மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பைசுஅள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி திரு.கா.நாகராஜ் என்பவர் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் ரூ.37,500/- மானிய நிதி உதவியுடன் 1 ஹெக்டர் பரப்பளவில் திசு வாழை சாகுபடி செய்துள்ளதையும், பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அடிலம் பகுதியைச் சேர்ந்த பட்டு உற்பத்தி விவசாயிகளான திரு.கோ.ஸ்ரீராம் மற்றும் திரு.அ.சின்னதம்பி ஆகியோர் அரசு மானிய நிதி உதவியுடன் மல்பெரி தோட்டம் மற்றும் பட்டுக்கூடு உற்பத்தி மனை அமைத்து பட்டுப்புழு வளர்த்து வருவதையும், வேளாண்மைத் துறையின் சார்பில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பந்தார அள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி திரு.ப.தீர்த்தகிரி என்பவர் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கத்தின் கீழ், ரூ.22,500/- மானிய நிதி உதவியுடன் 2 ஹெக்டர் பரப்பளவில் 800 தேக்க மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வருவதையும், கால்நடைப் பராமரிப்பு துறையின் சார்பில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முருக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த திருமதி.மங்கம்மாள் என்பவர் தேசிய வேளாண் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் மானிய நிதி உதவியுடன் 1,000 நாட்டுக்கோழிகள் வளர்த்து வருவதையும் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
விவசாயிகளிடம் அரசு வழங்குகின்ற மானிய நிதி உதவி முழுமையாக கிடைத்துள்ளதா என்பதையும், அரசின் உதவியுடன் சாகுபடி செய்து வருகின்ற பயிர்களை நன்கு பராமரித்து, பாதுகாத்து, அதிக மகசூல் பெற்று நிறைந்த வருவாய் பெறுவதற்கு விவசாயிகள் அனைவரும் பயிர் வளர்ப்பு பணிகளை முழுமையாக ஈடுபட வேண்டும். கால்நடைகள், கோழிகள் வளர்ப்பிற்கு அரசு வழங்குகின்ற உதவிகளை பெற்று சிறப்பாக அவற்றை வளர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பட்டு புழு வளர்ப்பு மானியம் பெற்று பட்டுப்புழு வளர்த்து வருகின்ற விவசாயிகள் அப்பணிகளை சிறப்பாக மேற்கொண்டு பட்டு உற்பத்தியினை அதிகரிப்பதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
வேளாண் வளர்ச்சிக்காகவும், விவசாயிகளின் வளர்ச்சிக்காகவும் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தனியாக நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. தமிழ்நாடு வளர்ச்சிக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு அம்ச தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்றான "மகசூல் பெருக்கம் – மகிழும் விவசாயி" என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டு, ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும் தன்னிறைவான கிராமத்தையும் உருவாக்குவதை முக்கிய நோக்கமாக கொண்டு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தமிழ்நாட்டிலுள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில் செயல்படுத்தும் விதமாக இந்தத் திட்டம் 2021-22- ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 1997 கிராம பஞ்சாயத்துகளில் நேற்றைய (23.05.2022) தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.227 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்திலும் இந்நிகழ்ச்சி 57 இடங்களில் நேரலையில் ஒளிப்பரப்பட்டது. நல்லம்பள்ளி வட்டாரம், பாளையம் புதூர் சமுதாய கூடத்தில் நேரலை ஒளிப்பரப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடன் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட தொடக்க விழா நேரலை நிகழ்ச்சிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்ட 57 இடங்களிலும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 1,800 விவசாயிகளுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வீதம் 5,400 தென்னங்கன்றுகளும், 855 ஹெக்டர் பரப்பளவில் வரப்பு பயிர் சாகுபடிக்காக 4.275 மெட்ரிக் டன் பயிறு வகை சான்று விதைகளும், ஒரு ஊராட்சிக்கு 5 எண்ணிக்கையிலான கைத்தெளிப்பான் வீதம் 57 ஊராட்சிகளுக்கு 285 கைத்தெளிப்பான்களும், ஒரு ஊராட்சிக்கு 5 எண்ணிக்கையிலான விசைத்தெளிப்பான் வீதம் 57 ஊராட்சிகளுக்கு 285 விசைத்தெளிப்பான்களும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 1,710 நபர்களுக்கு வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான விதைத் தொகுப்புகளும், 114 விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கான ஊக்கத்தொகைகளும், 114 விவசாயிகளுக்கு நெகிழிக் கூடைகள் மற்றும் பயிர் பாதுகாப்பு செய்ய ஏதுவாக ட்ரம்களும், 114 விவசாயிகளுக்கு வரப்பு ஓரங்களில் நடுவதற்கு பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகளும் என மொத்தம் 4,442 பயனாளிகளுக்கு விதைகள், தென்னங்கன்றுகள், வேளாண் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு வேளாண் பெருமக்களுக்காக அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்து திட்டங்களையும் விவசாய பெருமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்களது வேளாண் உற்பத்தியை பெருக்கி அதிக வருமானம் ஈட்டி தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் விவசாயிகளிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.இளங்கோவன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி.கோ.மாலினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.மோகன்தாஸ் சௌமியன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் திருமதி.கலைவாணி, பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திரு.வில்சன், உதவி வேளாண்மை அலுவலர் திருமதி.புவனேஸ்வரி மற்றும் துறை அலுவர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

