பென்னாகரம், ஜன. 06:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கலப்பம்பாடி அருகே உள்ள செஞ்சிமலைகாடு பகுதியில், 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால (Megalithic Period) கல்வட்டம் மற்றும் ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செஞ்சிமலைகாடு பகுதியில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பென்னாகரம் வரலாற்று மையத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர்கள் பெருமாள், கோவிந்தசாமி, சந்தோஷ்குமார் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் கணேசன், திருப்பதி ஆகியோர் அடங்கிய குழு அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது “பாண்டவர் மடுவு” என அழைக்கப்படும் இடத்தில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் இருப்பதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து வரலாற்று ஆசிரியர்கள் தெரிவித்ததாவது, பெருங்கற்காலம் மனித நாகரிக வாழ்க்கையின் தொடக்க காலமாகக் கருதப்படுகிறது. அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்து, அவர்களின் நினைவாக பெரிய கற்களை பயன்படுத்தி நினைவுச்சின்னங்களை அமைத்துள்ளனர். இத்தகைய நினைவுச்சின்னங்கள் கல்வட்டம், கல்திட்டை, கற்பதுக்கை போன்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் அதிகளவில் காணப்படுவதாகவும், கலப்பம்பாடி செஞ்சிமலைகாடு பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட சிறியதும் பெரியதுமான பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இவற்றில் பெரும்பாலானவை கற்பதுக்கைகளுடன் கூடிய கல்வட்டங்களாக உள்ளன. முக்கியமாக, பல கல்வட்டங்கள் எந்தவித சேதமும் இன்றி முழுமையாக பாதுகாக்கப்பட்ட நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், இப்பகுதியில் புதிய கற்காலத்தைச் சார்ந்த கல் ஆயுதங்கள் கிடைக்கும் வாய்ப்பும் அதிகம் இருப்பதாக வரலாற்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். இத்தகைய கல் ஆயுதங்களை சில பகுதிகளில் மக்கள் கோயில்களில் வைத்து தெய்வங்களாக வழிபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்கவும், அறிவியல் முறையில் ஆய்வு செய்யவும் தொல்லியல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.jpg)