பென்னாகரம், ஜன.06:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மாமரத்துப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு திருக்குறள் கருத்தரங்கம் இன்று (ஜனவரி 07) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. உதவி பேராசிரியர் கதிர்வேல் வரவேற்புரையாற்றினார்.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திருக்குறள் தொடர்பான கலை, இலக்கியம் மற்றும் அறிவுசார் நிகழ்வுகள் ஒரு வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இக்கல்லூரியில் திருக்குறள் கருத்தரங்குடன் இணைந்து குறள் வினாடி–வினா, விவாதப் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, ஒப்புவித்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கருத்தரங்கில் காளியப்பன், கண்ணன், முத்துக்குமாரசுவாமி, கதிர்வேல், திருநாவுக்கரசு, சத்தியமூர்த்தி, இளவரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, திருவள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் மற்றும் திருக்குறளின் இன்றைய சமூகப் பொருத்தம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்க உரையாற்றினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் உதவி பேராசிரியர் சுகனேஸ்வரன் நன்றி கூறினார். இந்த கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

.jpg)