Type Here to Get Search Results !

பஞ்சப்பள்ளி சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு – 4,500 ஏக்கர் நிலம் பயன்பெறும் - மாவட்ட ஆட்சியர்.


பாலக்கோடு, ஜன.05:


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2025–2026 ஆம் ஆண்டு (பசலி 1435) விவசாய பாசனத்திற்காக இன்று (05.01.2026) தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி அவர்களின் முன்னிலையில் பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.


சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2025–26 (பசலி 1435) ஆம் ஆண்டிற்கான பாசனத்திற்காக, அரசாணை எண் 02, நீர்வளத் (என்:1) துறை, நாள் 02.01.2026-ன் படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.


இதன்படி, பழைய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 5 ஏரிகளை நிரப்பி, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் 05.01.2026 முதல் 24.05.2026 வரை 140 நாட்களுக்கு பாசனத்திற்கு மொத்தம் 473.09 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கப்படும். இதன் மூலம், பழைய ஆயக்கட்டு பரப்பளவு 2,626 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பளவு 1,874 ஏக்கர் என மொத்தம் 4,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.


இந்த பாசனத் திட்டத்தின் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, சாமனூர், அத்திமுட்லு, மாரண்டஅள்ளி, குஜ்ஜாரஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி உள்ளிட்ட கிராமங்கள் நேரடியாக பயனடைகின்றன. தற்போதுள்ள நீர்மட்டத்தை கருத்தில் கொண்டு, விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, பாசனம் செய்து அதிக விளைச்சல் பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கணேஷ், மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், இந்நாள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய பெருமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies