Type Here to Get Search Results !

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்; தருமபுரி மாவட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை.


பாலக்கோடு, ஜன.06:

தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. இதற்காக காளைகளுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, போட்டிகளுக்கு தயார் செய்யப்படுவது வழக்கம்.


அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு, எருதாட்டம், “அத்து” எனப்படும் திறந்த வெளி ஓட்டப்பந்தயம், வடமாடு உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய போட்டிகளில் காளைகள் பங்கேற்கும் வகையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளான பெல்ரம்பட்டி, சீரியம்பட்டி, கரகூர், கோட்டூர், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் இளைஞர்கள் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.


காளைகளுக்கு நடைப்பயிற்சி, சூரிகாட்டும் பயிற்சி, நீச்சல் பயிற்சி, மண் குத்துதல், எகிறுதல், சீறிப் பாய்தல் போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும், வளர்க்கப்படும் காளைகளுக்கு செல்லப்பெயர்கள் வைத்து, குழந்தைகளைப் போல தினசரி கண்காணித்து பராமரித்து வருகின்றனர். காளைகளின் உடல் வலிமையை அதிகரிக்கும் வகையில் பருத்தி, துவரம் பொட்டு, உளுந்து பொட்டு உள்ளிட்ட 18 வகையான தானியங்களை கூழாக்கி உணவாக வழங்கி, போட்டிகளுக்காக தயார் செய்து வருவதாக தெரிவித்தனர்.


இந்நிலையில், தருமபுரி மாவட்ட நிர்வாகம் இதுவரை ஜல்லிக்கட்டு மற்றும் எருதாட்டம் போன்ற காளை போட்டிகளுக்கு அனுமதி வழங்காததால், இப்பகுதியைச் சேர்ந்த காளைகளை அண்டை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கொண்டு சென்று போட்டிகளில் பங்கேற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக இளைஞர்கள் கூறுகின்றனர். இதனால் கூடுதல் செலவுகளும், நேர விரயமும் ஏற்படுவதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.


எனவே, பிற மாவட்டங்களைப் போல தருமபுரி மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு, எருதாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய காளை போட்டிகளுக்கு அனுமதி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என, காளை வளர்ப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies