Type Here to Get Search Results !

இந்நாள் பெண் தலைவரை தாக்கிய முன்னாள் தலைவரின் கணவர்.


காரிமங்கலம் ஒன்றியம் கும்பாரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கௌரி திருக்குமரன் இருந்து வருகிறார். இவருக்கும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமியின் கணவரான அ.தி.மு.க. பிரமுகர் மாது என்பவருக்கும் இடையே ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப்பணிகள் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. 


இந்த நிலையில் கொல்லப்பட்டி கிராமத்தில் ரூ.2.11 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு நேற்று காலை ஊராட்சி மன்ற தலைவர் கௌரி திருக்குமரன் பூமிபூஜை செய்ய வந்தார். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. பிரமுகர் மாது, ஏற்கனவே இந்த பணியை தொடங்கி விட்டதாக கூறி ஊராட்சி மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், பெண் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியதாக கூறப்படுகிறது. 


இதனால் அதிர்ச்சி அடைந்த கவுரி திருக்குமரன், அ.தி.மு.க. பிரமுகரை கண்டித்து திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காரிமங்கலம் தாசில்தார் சின்னா, பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தர்ணாவில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவரிடம் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 


அப்போது அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் சிலர் தகாத வார்த்தைகளால் திட்டி தன்னை தாக்கியதாக ஊராட்சி மன்ற தலைவர் அதிகாரிகளிடம் புகார் கூறினார். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் கவுரி திருக்குமரன் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜையை செய்தார்.


இந்த பிரச்சினை தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் கவுரி திருக்குமரன் காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க. பிரமுகர் தாக்கியதாக கூறி பெண் ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. இதனால் 30-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies