பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டத்தூண்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கே. சிவா தலைமை வகித்தார். இதில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், பாலக்கோடு வட்டாட்சியர், வெள்ளிச்சந்தை வருவாய் அலுவலர், திம்மராயன்அள்ளி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பிக்கனள்ளி ஊராட்சியில் செயல்பட்டு வரும் குட் கிராப் இந்தியா எல்.எல்.பி. நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால் விவசாய நிலங்கள், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுவதாக மல்லுப்பட்டி பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
கழிவுநீர் பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய தீர்வு காண வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தூண்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் குணசேகரன், மாநில துணைச் செயலாளர் எஸ்.பி. நாகராஜ், மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் கௌதம், மாவட்டச் செயலாளர் முனிராஜ் மற்றும் மல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத், கோவிந்தராஜ், குமார், சுப்பிரமணி, சிவலிங்கம், சாமுண்டி, சிவகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
.gif)

