மாயன்கடை பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள இந்த டிரான்ஸ்பார்மர், மாரியப்ப செட்டி தெரு, ஜெட்டி கிருஷ்ண செட்டி தெரு, கனம்பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய நுழைவுப் பகுதியில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பாதையை தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சாலை விரிவாக்கப் பணிகளின்போது சாலையின் தரை மட்டம் உயர்த்தப்பட்டதாகவும், அதற்கேற்ப டிரான்ஸ்பார்மரின் உயரம் மாற்றப்படாததால் தற்போது தரைக்கும் டிரான்ஸ்பார்மருக்கும் இடையே சுமார் 4 அடி உயரம் மட்டுமே இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் டிரான்ஸ்பார்மரில் தலையை இடித்துக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, குறுகலான பாதையில் வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், குடியிருப்புப் பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த டிரான்ஸ்பார்மர், தெருக்களில் விளையாடும் சிறுவர்களின் கைகளுக்கு எட்டும் வகையில் தாழ்வாக இருப்பதாகவும், இதனால் பெற்றோர்கள் அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக சிறுவர்கள் டிரான்ஸ்பார்மரை தொடும் சூழல் ஏற்பட்டால் மின்சார விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை டிரான்ஸ்பார்மரை உயர்த்தி அமைக்கவோ அல்லது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்லும் வகையில் டிரான்ஸ்பார்மரை உரிய பாதுகாப்பு வசதிகளுடன் மாற்றி அமைக்க வேண்டும் என்றும், அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தாழ்வான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை சுமார் 10 அடி உயரத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
.gif)

