பாலக்கோடு காவல் நிலையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமை வகித்தார். இதில் விநாயகர் சிலைகள் அமைத்தல், ஊர்வலமாக எடுத்துச் செல்லுதல் மற்றும் சிலைகளை கரைத்தல் உள்ளிட்டவை தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், சாலைகளை மறித்து விநாயகர் சிலைகள் அமைக்கக்கூடாது; உரிய அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே சிலைகளை அமைக்க வேண்டும்; சிலைகளின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும் உள்ளிட்ட 29 முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட சிலைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
முக்கியமாக, செப்டம்பர் 14 முதல் 16-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மட்டுமே விநாயகர் சிலைகளை அமைத்து விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஊர்வலத்தின்போது பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும், பிற மதத்தினர் மற்றும் பொதுமக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பாடல்கள் அல்லது கோஷங்களை எழுப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
விழா முழுவதும் அமைதியான முறையில் நடைபெறவும், பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும் அனைத்து அமைப்பினரும் காவல்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், விநாயகர் சிலைகள் அமைக்க உள்ள நிர்வாகிகளின் கருத்துகள் மற்றும் சந்தேகங்கள் கேட்கப்பட்டு, அவற்றுக்கு காவல்துறை சார்பில் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் உதவி காவல் ஆய்வாளர் சந்திரன், நிலைய எழுத்தர் பெருமாள், முதல் நிலைக் காவலர் சின்னராசு மற்றும் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
.gif)

