Type Here to Get Search Results !

பாலக்கோடு உட்கோட்டத்தில் 355 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி! டி.எஸ்.பி. மாலதி தலைமையில் ஆலோசனை; 30 முக்கிய விதிமுறைகள் அறிவிப்பு.


பாலக்கோடு:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்டத்திற்குட்பட்ட கிராமப்புறங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


பாலக்கோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பாலக்கோடு டி.எஸ்.பி. மாலதி தலைமை வகித்தார். இதில் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் விநாயகர் சிலை அமைப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.


காவல் ஆய்வாளர்கள் மணிவண்ணன், ஆனந்தகுமார், அருள்வடிவழகன், சரோஜா மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் பெருமாள், மகேந்திரன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


355 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி


பாலக்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 355 விநாயகர் சிலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.


கூட்டத்தில், சாலைகளை மறித்து சிலைகள் அமைக்கக்கூடாது, உரிய அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே சிலைகளை அமைக்க வேண்டும், சிலைகளின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும் உள்ளிட்ட 30 முக்கிய அறிவுரைகள் மற்றும் விதிமுறைகள் வழங்கப்பட்டன.


விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களுக்கு சிலைகளை எடுத்துச் செல்லும்போது நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் மீன் வண்டிகளை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட சிலைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.


3 நாட்களுக்கு மட்டுமே விழா நடத்த அனுமதி

செப்டம்பர் 14 முதல் 16-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மட்டுமே விநாயகர் சிலைகளை அமைத்து விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.


ஊர்வலத்தின்போது பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும், பிற மதத்தினர் மற்றும் பொதுமக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பாடல்கள் அல்லது கோஷங்களை எழுப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.


விழா அமைதியான முறையில் நடைபெறவும், பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும் அனைத்து அமைப்பினரும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.


மேலும், விநாயகர் சிலைகள் அமைக்க உள்ள நிர்வாகிகளின் கருத்துகள் மற்றும் சந்தேகங்கள் கேட்கப்பட்டு, அவற்றுக்கு காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.


இக்கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies