Type Here to Get Search Results !

வடகிழக்கு பருவமழை: தருமபுரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்! 24x7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க உத்தரவு – அவசர உதவிக்கு 1077 உள்ளிட்ட தொலைபேசி எண்கள் அறிவிப்பு.


தருமபுரி:

வடகிழக்கு பருவமழை-2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்து அரசுத் துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப., அறிவுறுத்தியுள்ளார்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் பேரிடர் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம், கூகுள் மீட் வாயிலாக 08.09.2026 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப., தலைமை வகித்தார்.


கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள தாழ்வான மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளின் பட்டியல், அவசரகால போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்களின் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது.


பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளின் நீர் இருப்பு விவரங்களை தொடர்ந்து கண்காணித்து பட்டியல் தயாராக வைத்திருக்கவும், ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிவாரண முகாம்களான சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் பள்ளிகளை ஆய்வு செய்து தேவையான வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டது.


மழை மற்றும் வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க தேவையான குடிநீர் வாகனங்கள், தண்ணீர் தொட்டிகள், போர்டபிள் ஜெனரேட்டர்கள், டார்ச் லைட்கள், உணவு சமைக்கும் பாத்திரங்கள், எரிவாயு அடுப்புகள் உள்ளிட்ட உபகரணங்களையும், நியாய விலைக் கடைகளில் தேவையான உணவுப் பொருட்களின் இருப்பையும் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது.


சாலைகள், நீர்நிலைகள் பாதுகாப்பில் கவனம்

சாலைகளில் மழைநீர் தேங்காத வகையில் முன்கூட்டியே சாலைகளைச் சீரமைக்கவும், கழிவுநீர் கால்வாய்களைத் தூர்வாரவும் அறிவுறுத்தப்பட்டது. அணைக்கட்டுகள் மற்றும் ஏரிகளின் கரைப்பகுதிகளில் நீர்மட்டம் அதிகரிக்கும் சூழலில் பயன்படுத்துவதற்குத் தேவையான அளவு மணல் மூட்டைகள் இருப்பில் உள்ளதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.


சாலையோர மரங்கள் விழுந்தால் அவற்றை உடனடியாக அகற்ற ஜேசிபி, புல்டோசர், மரம் வெட்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் போர்டபிள் ஜெனரேட்டர்கள், டார்ச் லைட்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் நல்ல நிலையில் பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


மேலும், அவசர காலங்களில் உதவிக்கு அழைக்க சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பாம்பு பிடிப்பவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கிய விவரப்பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


சுகாதார நடவடிக்கைகளும் தீவிரப்படுத்த உத்தரவு

மழைக்காலத்திற்கு முன்பாக குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் தெருச்சாலைகளைச் சீரமைக்கவும், கழிவுநீர் கால்வாய்களைத் தூர்வாரவும் அறிவுறுத்தப்பட்டது. தெருக்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல், குளோரின் பவுடர் தூவுதல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


அனைத்து குடிநீர் கிணறுகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை சுத்தப்படுத்தி, தேவையான அளவு குளோரின் கலந்து பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. நடமாடும் மருத்துவக் குழுக்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டது.


கால்நடை அல்லது மனித உயிரிழப்பு ஏற்படும் நேரங்களில் உடனடியாக நிவாரண உதவி வழங்குவதற்கு ஏதுவாக, பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை விரைந்து வழங்க மருத்துவம் மற்றும் கால்நடைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


24 மணி நேர கட்டுப்பாட்டு மையங்கள்

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து, சுழற்சி முறையில் அலுவலர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


பேரிடர் காலங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் தகவல்களை முறையாகப் பதிவு செய்து, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உயர் அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


மாவட்டத்தில் உள்ள 9 நிலையான மழைமானிகள், 3 தானியங்கி வானிலை மையங்கள் மற்றும் 45 தானியங்கி மழைமானிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்து, அதன் விவரங்களை GPS புகைப்படங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.


சேதமடையக்கூடிய கட்டிடங்கள் கணக்கெடுப்பு

வருவாய் கோட்டாட்சியர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சேதமடையக்கூடிய அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், குடியிருப்பு வீடுகளின் விவரங்களை சேகரித்து, பருவமழைக்கு முன்பாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


சூறாவளிக் காற்றினால் சாலையோர மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்தால் அவற்றை உடனடியாக அகற்ற தேவையான இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், மின்கம்பங்கள் அல்லது மின்கம்பிகள் அறுந்து விழும் போது உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்து, சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் மின் இணைப்பு வழங்கவும் மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


மழையால் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழலில், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் மாற்று வழித்தடங்களில் போக்குவரத்தைத் திருப்பிவிட தேவையான நடவடிக்கைகளை காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் அறிவுறுத்தினார்.


அவசர உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொள்ளலாம்

அவசரத் தேவைகள், பேரிடர் கால வீடு சேதம், கால்நடை மற்றும் மனித உயிரிழப்பு, போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட சேதங்கள் தொடர்பான தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரிவிக்க பொதுமக்கள் மாவட்ட கட்டுப்பாட்டு மைய இலவச தொலைபேசி எண் 1077 மற்றும் 04342-231077, 04342-231500, 04342-230067 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுமதி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் ஜார்ஜ், தனி வட்டாட்சியர் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை) சின்னா உள்ளிட்ட அனைத்து துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies