Type Here to Get Search Results !

தருமபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு பெருவிழா.


தருமபுரி, ஆகஸ்ட் 31:


தருமபுரி நகர் கோட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனாகிய மல்லிகார்ஜுனேஸ்வர சுவாமி திருக்கோயிலில் புனருத்தாரணம், ஜீர்ணோத்தாரணம் மற்றும் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு (கும்பாபிஷேக) நன்னீராட்டு பெருவிழா சாஸ்திர சம்பிரதாயங்களுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.


வேளாவனத்தில் அமைந்துள்ளதால் “திருவேளாலீஸ்வரம்” என அழைக்கப்படும் இத்திருத்தலம், கொங்கு நாட்டின் சிவ வைப்புத் தலங்களில் ஒன்றாகவும், ஏழாம் நூற்றாண்டில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடைய தலமாகவும் விளங்கி வருகிறது.


பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனுக்கு சிவபெருமான் அருள் புரிந்து அவரது சிவசாபத்தை நீக்கியதாகக் கூறப்படும் இத்தலத்தில், இறைவன் “மல்லிகார்ஜுனேஸ்வரர்” எனப் போற்றப்படுகிறார். மனித வாழ்க்கைக்குத் தேவையான பதினெட்டு நற்குணங்களை குறிக்கும் வகையில் பதினெட்டு படிகளுடன் தாய்மையின் முழுவடிவமாக அன்னை கல்யாண காமாக்ஷி அம்பிகை எழுந்தருளியுள்ளார்.


மேலும், ‘ரத்னத்ரயம்’ எனப்படும் மூன்று சூலங்களைத் தாங்கி மகிஷாசூரனை வதம் செய்யும் கம்பீரத் திருக்கோலத்தில் சங்க காலக் கொற்றவை ராஜதுர்க்கையும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஸ்ரீராமனுக்காக தமிழ் குறுமுனி அகத்தியர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ர யந்திரம், நுளம்ப பல்லவர்களால் காமாக்ஷி ஆலயத்தில் செதுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஸ்ரீராமாயண சுவரோவியச் சிற்பங்கள், தொங்கும் தூண் மற்றும் அஷ்டதிக் பாலகர்களின் சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு கலைநயமிக்க சிறப்புகளையும் இத்தலம் கொண்டுள்ளது.


கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நெடுமான் அஞ்சி, தமிழ்ப்புலவர் ஔவையாருக்கு அரிய நெல்லிக்கனியை வழங்கிய வரலாற்றுப் பெருமையுடனும் இத்திருக்கோயில் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க திருக்கோயிலில் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு, கருங்கற்களில் சிற்ப மற்றும் வர்ண வேலைப்பாடுகள் நிறைவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 27-ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.


விழாவின் முக்கிய நிகழ்வாக விநாயகர், சுப்பிரமணியர், ராஜதுர்க்கை, சித்தேஸ்வரர், காலபைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் மகாபூர்ணாஹுதி நிறைவடைந்த பின்னர், புனித கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர் அருள்மிகு காமாட்சி அம்பிகை மற்றும் மல்லிகார்ஜுன சுவாமி விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து மூலாலய தெய்வங்களுக்கு புனித நீரால் நன்னீராட்டு செய்யப்பட்டு, மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் உலக நன்மை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கும், அம்மாளுக்கும் திருக்கல்யாண வைபவம் அரோகரா கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெற்ற யாகசாலை பூஜையில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


இப்புனித பெருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், திருப்பணி உபயதாரர்கள் மற்றும் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies