Type Here to Get Search Results !

ஆசிரியர்களுக்கு ரோஜா, பொன்னாடை அணிவித்து பாராட்டு! மாட்லாம்பட்டி அரசு பள்ளியில் குழந்தைத் திருமணத் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி.


தருமபுரி:

தருமபுரி அடுத்த மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா மற்றும் குழந்தைத் திருமணத்தைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு JRC மண்டல ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் முருகன், DNC தொண்டு நிறுவன இயக்குநர் கோவிந்தசாமி, களப்பணியாளர் ஜெயஸ்ரீ மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு ரோஜா பூ வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் எதிர்கால முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் முக்கியப் பங்களிப்பு குறித்து நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.


இதில் பள்ளியில் பயிலும் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக குழந்தைத் திருமணத்தைத் தடுப்பது குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


குழந்தைத் திருமணத்தால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதுடன், அவர்களின் உடல் மற்றும் மனநலம், எதிர்கால வாழ்க்கை ஆகியவையும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதாக எடுத்துரைக்கப்பட்டது. எனவே, குழந்தைத் திருமணத்தை முற்றிலும் ஒழிக்க அரசு நிர்வாகம், பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தொடர்ந்து, “குழந்தைத் திருமணத்தை தடுப்போம்; குழந்தைகளின் உரிமைகளையும் கல்வியையும் உறுதி செய்து, குழந்தைத் திருமணம் இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies