தருமபுரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு வரலாற்றுத் துறை மாணவி எம். வசந்தி, 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து கல்லூரிக்கு பெருமை சேர்த்தார்.
இதையடுத்து, மாவட்ட தடகள சங்கம் சார்பில் வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் தகுதிச் சான்றிதழை கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் மாணவி எம். வசந்திக்கு வழங்கி பாராட்டினார்.
மாநிலப் போட்டிக்கு மாணவி வசந்தி தகுதி
1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதன் மூலம் மாணவி எம். வசந்தி, அக்டோபர் மாதம் திண்டுக்கல்லில் நடைபெற உள்ள மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
இறகுப்பந்து போட்டியில் 4-ம் இடம்
இதேபோல், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் மற்றும் மகளிர் இறகுப்பந்து போட்டிகள் கடந்த வாரம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில் நடைபெற்றன.
இதில் 19 அணிகள் பங்கேற்ற நிலையில், தருமபுரி அரசு கலைக் கல்லூரி ஆடவர் இறகுப்பந்து அணி சிறப்பாக விளையாடி நான்காம் இடத்தைப் பெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் கோப்பையை செப்டம்பர் 9-ஆம் தேதி கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் வழங்கி, வீரர்களைப் பாராட்டினார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர் கு. பாலமுருகன், பேராசிரியர்கள் விஜயதேவன், கிருபாகரன், பிரபாகரன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், அனைத்து துறைத் தலைவர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
.gif)

