மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுப்பிரிவு என பல்வேறு பிரிவுகளில் நடைபெறுகின்றன. முதல் நாளான செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற போட்டிகளில் மட்டும் 4,500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பல்வேறு விளையாட்டுகளில் போட்டிகள்
மாவட்ட விளையாட்டரங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கான இறகுப்பந்து, கூடைப்பந்து, மேஜைப்பந்து, வாலிபால், சிலம்பம், கோ-கோ, கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட போட்டிகள் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்றன. பள்ளி மாணவிகளுக்கான சிலம்பம் மற்றும் மேஜைப்பந்து போட்டிகள் செப்டம்பர் 10-ஆம் தேதியும், இறகுப்பந்து, கூடைப்பந்து, வாலிபால், கோ-கோ, கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட போட்டிகள் செப்டம்பர் 11-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் செப்டம்பர் 11-ஆம் தேதியும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் செப்டம்பர் 17-ஆம் தேதியும் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளன.
கல்லூரி மாணவர்களுக்கான இறகுப்பந்து, கூடைப்பந்து, மேஜைப்பந்து, வாலிபால், சிலம்பம், பூப்பந்து, கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட போட்டிகள் செப்டம்பர் 15-ஆம் தேதியும், கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகள் செப்டம்பர் 16-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.
நீச்சல், கிரிக்கெட், கேரம், சதுரங்கம்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான நீச்சல் போட்டிகள் செப்டம்பர் 10-ஆம் தேதியும், மாணவிகளுக்கான நீச்சல் போட்டிகள் செப்டம்பர் 11-ஆம் தேதியும் தருமபுரி இராஜாஜி நீச்சல் குளத்தில் நடைபெறுகின்றன.
கிரிக்கெட் போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 9-ஆம் தேதியும், மாணவிகளுக்கு செப்டம்பர் 11-ஆம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதியும், கல்லூரி மாணவிகளுக்கு செப்டம்பர் 16-ஆம் தேதியும் நடைபெறுகின்றன. பொதுப்பிரிவு ஆண்களுக்கான போட்டி செப்டம்பர் 18-ஆம் தேதியும், பெண்களுக்கான போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதியும் ஆட்டுக்காரம்பட்டி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
கேரம் போட்டிகள் செந்தில் மெட்ரிக் பள்ளியிலும், சதுரங்கப் போட்டிகள் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காந்தி நகரிலும் நடைபெறுகின்றன.
கபாடி மற்றும் ஹேண்ட்பால் போட்டிகள் நத்தஅள்ளி அக்சயா மெட்ரிக் பள்ளியிலும், யோகாசனப் போட்டிகள் அதியமான் கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியிலும் நடைபெறுகின்றன.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி செப்டம்பர் 9-ஆம் தேதி சிப்காட் சாலை, தடங்கம் மேம்பாலம் அருகே நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளன. அரசு பணியாளர்களுக்கான இறகுப்பந்து, கபாடி, வாலிபால் மற்றும் தடகளப் போட்டிகள் செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெறுகின்றன.
போட்டியாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்
மாவட்ட அளவிலான போட்டிகளில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், முன்பதிவு செய்யாதவர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கும் என்பதால், தாமதமாக வரும் வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் படிப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், முன்பதிவு செய்த விவரம் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும், அரசு பணியாளர்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் அலுவலக கடிதத்தையும், பொதுப்பிரிவு போட்டியாளர்கள் ஆதார் நகல் உள்ளிட்ட தேவையான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை
மாவட்ட மற்றும் மண்டல அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் முழுமையான விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்: tncmtrophy.sdat.in
மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் பா. ஜார்ஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ். சிவரஞ்சன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. லோகநாதன், தருமபுரி வட்டாட்சியர் ஜெ. சுகுமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி கபாடி பயிற்றுநர் ஆர். அரவிந்த் ராஜா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)