பாலக்கோடு, ஆக.26 :
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சாமியார்நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. முக்கிய நிகழ்வாக அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோ பூஜையும் நடைபெற்றது.
இதையடுத்து யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் கலசங்களை கோயில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமேல் சுமந்து கோயிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் வேதபாராயணர் பரந்தாமன் தலைமையில் கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டதுடன், பக்தர்கள் மீதும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பாபிஷேக விழாவில் சாமியார்நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊர்கவுண்டர் சுப்ரமணி, மந்திரிகவுண்டர் சின்னராஜ், கோல்காரர் ரமேஷ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொப்பிடி முருகேசன், பூசாரி மாரியப்பன் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் விழாக் குழுவினர் மற்றும் சாமியார்நகர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
.gif)

.jpg)
.jpg)