பாலக்கோடு, ஆக.25 :
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கெயில் குழாயை சுத்தம் செய்யும் பணியின்போது ஆயில் கலந்ததாகக் கூறப்படும் கழிவுநீர் விவசாய நிலத்தில் விடப்பட்டதால், அங்கு மேய்ந்த கால்நடைகள் பாதிக்கப்பட்டு ஒரு பசுமாடு உயிரிழந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில், கொச்சி முதல் பெங்களூரு வரை செல்லும் கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குழாய்களில் அவ்வப்போது பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், பாலக்கோடு அருகே உள்ள ரெட்டியூர் கிராமப் பகுதியில் கெயில் குழாயை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது குழாயில் இருந்து வெளியேறிய ஆயில் கலந்த கழிவுநீர் அதிக அளவில் விவசாய நிலப்பகுதியில் விடப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் விவசாய நிலத்தில் தேங்கியிருந்த தண்ணீரிலும், அப்பகுதியில் வளர்ந்திருந்த புல் மற்றும் பயிர்களிலும் நச்சுத்தன்மை கலந்ததாக கூறப்படுகிறது. இதனை அறியாமல் அப்பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற கால்நடைகள் அந்த புல் மற்றும் பயிர்களை மேய்ந்துள்ளன.
இதையடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு வாந்தி, சோர்வு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்த நிலையில் ஒரு பசுமாடு உயிரிழந்ததாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் இழப்பீடு கோரிக்கை
சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், கெயில் குழாய் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகளின்போது வெளியேற்றப்படும் கழிவுநீரை விவசாய நிலங்கள், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பயன்படுத்தும் பகுதிகளில் விடாமல், பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த பசுமாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டுள்ள மற்ற கால்நடைகளுக்கு உடனடியாக கால்நடை மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை
கெயில் குழாய் சுத்தம் செய்யும் பணியின்போது வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் ஆயில் கலந்த கழிவுநீரால் விவசாய நிலமும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கழிவுநீர் விவசாய நிலத்தில் கலந்ததற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)

.jpg)