Type Here to Get Search Results !

பாலக்கோடு, பஞ்சப்பள்ளியில் புகையிலை விற்ற 2 கடைகளுக்கு சீல்! ரூ.75 ஆயிரம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை.


பாலக்கோடு, ஆக. 26:
 


தருமபுரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பாலக்கோடு பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த ஒரு பீடா கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர் மீது காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.


தொடர்ந்து தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலரின் உத்தரவின்பேரில், பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி நடவடிக்கை மேற்கொண்டார். அந்தக் கடை 30 நாட்களுக்கு செயல்படத் தடை விதிக்கப்பட்டதுடன், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல், பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், பஞ்சப்பள்ளி மூன்று ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த மளிகைக் கடைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


அந்தக் கடை 14 நாட்களுக்கு செயல்படத் தடை விதிக்கப்பட்டதுடன், ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் மூலம் இரண்டு கடைகளுக்கும் சேர்த்து ரூ.75,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies